நேதாஜி மார்க்கெட்டில் ஏல முறையில் கடைகள் ஒதுக்கக்கோரி 23-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்


நேதாஜி மார்க்கெட்டில் ஏல முறையில் கடைகள் ஒதுக்கக்கோரி 23-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 17 Oct 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

நேதாஜி மார்க்கெட்டில் ஏல முறையில் கடைகள் ஒதுக்கக்கோரி 23-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

வேலூர்,

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டி ஏல முறையில் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 23-ந் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வேலூர் நகரின் மையப்பகுதியில் நேதாஜி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 754 நிரந்தர கடைகளும் 250 தரைக்கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்டை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். 5 மாநிலங்களில் இருந்து இங்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து 4 மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

மார்க்கெட் மிகவும் குறுகலான இடத்தில் இருப்பதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் காய்கறி வாங்க செல்ல சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி கடைகள் கட்ட மாநகராட்சி திட்டம் தயாரித்துள்ளது. மேலும் புதிதாக கட்டப்படும் கடைகளை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் வணிகர்கள் நலச்சங்க கூட்டம் தலைவர் பாலு தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பிச்சாண்டி வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ஞானவேல் கலந்து கொண்டார். நேதாஜி மார்க்கெட்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டப்படும் கடைகளை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாமல், ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நேதாஜி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளை அடைப்பது, மேலும் அண்ணா கலையரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story