முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதி உதவி: நடிகை பிரணிதா, அரசு பள்ளியை தத்தெடுத்தார்


முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதி உதவி: நடிகை பிரணிதா, அரசு பள்ளியை தத்தெடுத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:02 AM IST (Updated: 17 Oct 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகை பிரணிதா, அரசு பள்ளியை தத்தெடுத்தார்.

பெங்களூரு,

நடிகை பிரணிதா அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்தார். முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதி உதவியை அவர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “நானும் பாலியல் துன்புறுத்தலை சந்தித்து உள்ளேன்” என்று கூறினார்.

பிரபல நடிகையாக இருந்து வருபவர் பிரணிதா. இவர், நடிகர் சூர்யாவுடன் ‘மாஸ்’ என்ற படத்தில் நடித்தார். இன்னும் பல்வேறு தமிழ் படங்களிலும், கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் முன்னணி நடிகையாக உள்ளார். இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை அவர் தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக அந்த பள்ளியின் மேம்பாட்டிற்கு ரூ.5 லட்சம் நிதியை, அரசு பள்ளிகள் பாதுகாப்பு குழு தலைவர் அனில்ஷெட்டியிடம் பெங்களூருவில் நேற்று வழங்கினார். அதன் பிறகு பிரணிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இதற்கு முன்பு “டீச் பார் சேஞ்“(மாற்றத்திற்காக கற்பித்தல்) என்ற அமைப்பில் சேர்ந்து, அரசு பள்ளியில் பாடம் நடத்தினேன். அப்போது தான், அரசு பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டேன். பெண் குழந்தைகளுக்கு என்று தனியாக கழிவறை கிடையாது. இதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயங்குவதை கண்டேன். அதனால் அரசு பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்துள்ளேன். முதல் கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளேன்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ‘மீ டூ’ இயக்கம் தொடங்கி இருப்பதை நான் வரவேற்கிறேன். எனக்கும் பாலியல் துன்புறுத்தல் போன்ற மோசமான நிகழ்வுகள் நடந்தது. நானும் அதை சந்தித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரணிதா கூறினார்.

அரசு பள்ளிகள் பாதுகாப்பு குழு தலைவர் அனில்ஷெட்டி கூறுகையில், “கர்நாடகத்தில் 43 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 50 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது இல்லை. திரைத்துறையில் இருப்பவர்கள் உள்பட பலரும், அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவ முன்வர வேண்டும். நடிகை பிரணிதா ரூ.5 லட்சம் வழங்கி இருக்கிறார். இந்த நிதி, ஹாசன் மாவட்டத்தில் மோசமான நிலையில் உள்ள ஒரு பள்ளியின் மேம்பாட்டிற்கு செலவிடப்படும்“ என்றார்.


Next Story