கடலூர் அருகே: சேற்றில் சிக்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் ஆற்றில் குளித்தபோது பரிதாபம்


கடலூர் அருகே: சேற்றில் சிக்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் ஆற்றில் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:30 AM IST (Updated: 17 Oct 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே சேற்றில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார். நண்பர்களுடன் ஆற்றில் குளித்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நெல்லிக்குப்பம், 


கடலூர் முதுநகர் பனங் காட்டு காலனியை சேர்ந்தவர் தக்காளி என்ற மணிமாறன்(வயது 26). இவருடைய மனைவி சுபாஷினி. இவர்களுக்கு கோபிகா என்ற மகளும், யோகேஷ் என்ற மகனும் உள்ளனர். மணிமாறன், தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த கமல், பாண்டியன், கஜேந்திரன், அலெக்ஸ், நெல்சன் ஆகியோருடன் நேற்று முன்தினம் காலையில் சாராயம் குடிப்பதற்காக புதுச்சேரி மாநிலம் கும்தாமேடு சாராயக்கடைக்கு சென்றார். அங்கு அனைவரும் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். வரும் வழியில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணையாற்றில் குளித்தனர்.

அப்போது மணிமாறன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் 5 பேரும், அவசரஅவசரமாக குளித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இதனிடையே வெகுநேரமாகியும் மணிமாறன், வீட்டுக்கு வராததால் சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார். உடனே இது பற்றி அவர்களது நண்பர்களிடம் விசாரித்தபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளனர்.

உடனே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, 5 பேரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள், தாங்கள் குளித்துக்கொண்டிருந்தபோது மணிமாறன் திடீரென மாயமாகி விட்டதாக கூறினர். இதையடுத்து கிராம மக்கள், தென்பெண்ணையாற்றுக்கு சென்று மணிமாறனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து கடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நேற்று காலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், மணிமாறன் பிணமாக மீட்கப்பட்டார். ஆற்றில் குளித்த மணிமாறன், சேற்றில் சிக்கி பலியாகி இருப்பது தெரியவந்தது.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த ரெட்டிச்சாவடி போலீசார், மணிமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story