ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு
ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்து உள்ளன.
கோவை,
ஆண்டுதோறும் ஆயுதபூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்த ஆயுதபூஜையின் போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை வழிபாடு செய்வார்கள். இதனால் பொருட்களை வாங்க நேற்று கோவை பூமார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நேற்று பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. இதுகுறித்து பூமார்க்கெட் கமிட்டி உறுப்பினர் அருண் சங்கர் கூறிய தாவது:-
தொழில் நிறுவனங்கள் அதிகளவு உள்ள கோவையில் ஆயுத பூஜையையொட்டி அந்த நிறுவனங்களில் பூஜைக்காக வாழைக்கன்று, பூக்கள், பொரி, கொண்டக்கடலை உள்ளிட்டவற்றை அதிகமாக வாங்கி செல்வார்கள். ஆயுத பூஜைக்கு பெரும்பாலானோர் பயன்படுத்தும் செவ்வந்திப்பூ கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. அதுவே தற்போது கிலோ ரூ.200-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.400-க்கும், கிலோ ரூ.80-க்கு விற்ற ரோஜா ரூ.200-க்கும், ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையான செண்டு பூ கிலோ ரூ.100-க்கும் விலை உயர்ந்து விற்கப்பட்டன. 2 அடி உயரம் கொண்ட ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆயுதபூஜையையொட்டி வாழைத்தாரின் விலை உயர்ந்து உள்ளது. இதன்படி பூஜைக்கு பயன்படுத்தும் பூவன் பழம் பெரிய தார் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. இதேபோல் ரஸ்தாலி, கோழிக்கூடு, நாடன் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் கூறும்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வாழைப்பழங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. நாளை (இன்று) அனைத்து பூஜை பொருட்களின் விலை மேலும் உயரும் என்றார்.
இதேபோல் பூஜைக்கு வைக்கப்படும் பொரி ஒரு படி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ மண்ட வெல்லம் ரூ.60-க்கும், அச்சுவெல்லம் ரூ.70-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும், மாதுளை ரூ.130 முதல் ரூ.150 வரையும், ஆரஞ்சு ரூ.40 முதல் ரூ.50 வரையும், கொய்யா ரூ.100-க்கும், கரும்பு ஒரு ஜோடி ரூ.50 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்பட்டன. கொண்டக்கடலை, பொட்டுக்கடலை விலையும் அதிகரித்து காணப்பட்டன. கோவையில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு இருந்தது.
Related Tags :
Next Story