சுரண்டை அருகே வீடு புகுந்து 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
சுரண்டை அருகே வீடு புகுந்து 2 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுரண்டை,
சுரண்டை அருகே வீடு புகுந்து 2 பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளிநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை அணைந்தபெருமாள் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி மின்னல்கொடி (வயது 36). இவருடைய மாமியார் கோமதியம்மாள். சம்பவத்தன்று இரவு 3 பேரும் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது மின்னல்கொடி உள்ளிட்ட 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
சங்கிலி பறிப்புஉடனே அந்த மர்மநபர் கோமதியம்மாள் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் மின்னல்கொடி கழுத்தில் கிடந்த 3¾ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு கண்விழித்த மின்னல்கொடி மர்மநபர் சங்கிலியை பறிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கைகளால் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
இதனால் சுதாரித்த மர்மநபர் தங்க சங்கிலியை வேகமாக பிடித்து இழுத்ததில், இரண்டு துண்டாக அறுந்து, 1¼ பவுன் மின்னல்கொடி கையிலும், 2½ பவுன் மர்ம நபர் கையிலும் சிக்கியது. உடனே ஜெயச்சந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் 5 பவுன் நகையுடன் தப்பித்து இருளில் ஓடி மறைந்து விட்டார். பல இடங்களில் தேடியும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ஜெயச்சந்திரன் சாம்பவர் வடகரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.