நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் முதன்மை செயலாளர் அதுல்மிஸ்ரா உத்தரவு


நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் முதன்மை செயலாளர் அதுல்மிஸ்ரா உத்தரவு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:00 AM IST (Updated: 17 Oct 2018 6:53 PM IST)
t-max-icont-min-icon

நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என நெல்லையில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு முதன்மை செயலாளர் அதுல்மிஸ்ரா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நெல்லை, 

நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என நெல்லையில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு முதன்மை செயலாளர் அதுல்மிஸ்ரா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம் 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழக அரசு வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்மிஸ்ரா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதன்மை செயலாளர் அதுல்மிஸ்ரா பேசியதாவது:–

நதிநீர் இணைப்பு திட்டம் 

தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் ராமநதி, ஜம்பு நதி இணைப்பு திட்ட பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். இதுவரை பணிகள் எந்த நிலையில் இருக்கிறது? என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவடைந்தால் மழைக்காலங்களில் வீணாக தண்ணீர் கடலில் கலக்காது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைவருக்கும் இணையதளம் மூலம் எளிய முறையில் வீட்டுமனை பட்டா கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்தராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே, தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story