தாமிரபரணி புஷ்கர விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நெல்லையில் மடாதிபதி–பக்தர்கள் திரண்டனர்


தாமிரபரணி புஷ்கர விழாவில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நெல்லையில் மடாதிபதி–பக்தர்கள் திரண்டனர்
x
தினத்தந்தி 18 Oct 2018 3:30 AM IST (Updated: 17 Oct 2018 8:24 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நேற்று நடந்தது.

நெல்லை, 

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நேற்று நடந்தது. இதில் மடாதிபதி–பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தாமிரபரணி புஷ்கர விழா

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11–ந் தேதி தொடங்கியது. இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

7–ம் நாளான நேற்று காலை பல்வேறு படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடினார்கள். அகில இந்திய துறவிகள் சங்க செயலாளர் ராமானந்த சுவாமிகள் தலைமையில் மாலையில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடந்தது.

திருப்புடைமருதூர், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறை, நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறை, சீவலப்பேரி ஆற்றுப்பாலம் உள்ளிட்ட படித்துறைகளில் காலையில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். மாலையில் தீப ஆரத்தி வழிபாடு நடந்தது.

சிறப்பு யாகம்

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நேற்று காலை நடந்தது. இதில் மடாதிபதிகள், சங்கர்நகர் ஜெயேந்திர பள்ளி தாளாளர் நிர்மல் ராமரத்தினம், பள்ளி முதல்வர் உஷாராமன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் சின்னத்திரை நடிகை திவ்யா கலந்து கொண்டு புனித நீராடினார். நெல்லை அருகே உள்ள மேலநத்தம் அக்னிதீர்த்தத்தில் பெண்கள் தீப வழிபாடு நடத்தினார்கள். முறப்பாடு படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

அன்னதானம்

நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் அருகே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோல் பல்வேறு படித்துறைகளிலும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட படித்துறைகளில் மாநகராட்சி சார்பில் குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, துப்புரவு பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story