வனப்பகுதியையொட்டி சூரிய மின்வேலி அமைக்க வலியுறுத்தி ஸ்ரீமதுரை ஊராட்சியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்


வனப்பகுதியையொட்டி சூரிய மின்வேலி அமைக்க வலியுறுத்தி ஸ்ரீமதுரை ஊராட்சியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 Oct 2018 3:30 AM IST (Updated: 18 Oct 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியையொட்டி சூரிய மின்வேலி அமைக்க வலியுறுத்தி ஸ்ரீமதுரை ஊராட்சியில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் வனவிலங்குகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும், வனப்பகுதியையொட்டி சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் நேற்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி கம்மாத்தி, மண்வயல் உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் மண்வயல் பஜாரில் பொதுமக்கள், வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்துக்கு ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் கே.வி.ஜோசப் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பத்மநாதன், நகர செயலாளர் சக்திவேல், தி.மு.க. நிர்வாகி லியாகத் அலி, காங்கிரஸ் நிர்வாகி கோஷிபேபி உள்பட அனைத்து அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு பேசினர். போராட்டம் குறித்து ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் கூறியதாவது:-

கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஊருக்குள் வனவிலங்குகள் வருவதை கட்டுப்படுத்த வனப்பகுதியையொட்டி சூரிய மின்வேலிகளை அமைக்க வேண்டும். மேலும் அரசு நிலங்களில் வாழும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டம், புலிகள் காப்பகம் என பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகிறோம். இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இதனால் வருங்காலத்தில் மக்கள் வாழ்வுரிமை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story