அ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது: தி.மு.க.வின் கனவு கானல் நீராகிவிடும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது: தி.மு.க.வின் கனவு கானல் நீராகிவிடும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2018 9:45 PM GMT (Updated: 17 Oct 2018 7:31 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது, தி.மு.க.வின் கனவு கானல் நீராகிவிடும் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உளுந்தூர்பேட்டை, 


அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.ஜி.ஆர். திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றியும், விழாவை தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியேறி, அண்ணா கனவை நனவாக்க 1972-ம் ஆண்டு இதே நாளில் அ.தி.மு.க.வை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை தமிழகம் அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டபோது அதை ஒன்று படுத்திய பெருமை ஜெயலலிதாவை சேரும். கழகம் பிளவுபட்டபோது சேவல் சின்னத்தில் இருந்து வெற்றி பெற்ற 27 சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அதில் இருந்து 44 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்திற்காக உழைத்து கொண்டு இருக்கிறேன்.

ஜெயலலிதாவை அன்று சட்டமன்றத்தில் கடுமையாக தாக்கினார்கள். அப்போது நான் மீண்டும் சட்டசபைக்குள் முதல்-அமைச்சராகி வருவேன் என்றார். அதன்படி 1991-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார் என்பது வரலாறு.

தி.மு.க. ஆட்சியில் இருந்து இருக்கிறது. ஆனால் 11 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வின் சிறப்பான ஆட்சியை எம்.ஜி.ஆர். தந்தார். பின்னர் ஜெயலலிதா 6 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்து 15½ ஆண்டு காலம் நல்லாட்சியை தந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஒரு வருடம் 8 மாதம் ஆகி இருக்கிறது. அவர் விட்டுச்சென்ற பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க. தான். கிட்டத்தட்ட 28 ஆண்டு காலம் ஆட்சி செய்து இருக்கிறது.

குற்றவாளி என்று கூறவில்லை

இந்த கட்சியை மிரட்டி பார்க்கின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. உங்களுக்கு தான் பயம் உள்ளது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டிய விவகாரத்தில் ஊழல் நடந்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். ஆனால் என் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்கள். நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.

நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கில் நீதிமன்றம், அவர் அதிகாரத்தில் இருக்கிறார், எனவே விசாரணை சரியாக நடக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி என்று கூறவில்லை. மடியில் கனமில்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார்.

விசாரணை ஆணையம்

எங்கள் இயக்கத்தில் அதிக வக்கீல்கள் உள்ளனர். வழக்குதொடர எங்களுக்கும் தெரியும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் நீங்கள் சீண்டி விட்டீர்கள். அதற்கான பலனை அனுபவிக்க தான் போகிறீர்கள். புதிய தலைமை செயலகத்திற்கு ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் உடனே ஏன் தடையாணை வாங்குகிறீர்கள். ஆகவே உங்களுக்கு பயம் இருக்கிறது. எத்தனை வழக்குகளையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களுக்காக நாங்கள் தான் எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளோம்.

கம்பெனி

தி.மு.க.வில் கருணாநிதி, அவருக்கு பின்னர் மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி வந்துள்ளார். இது வாரிசு அரசியல். எனவே தி.மு.க. ஒரு கட்சி அல்ல, கம்பெனியாக்கிவிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. அண்ணா இருந்த போது, சாதாரண தொண்டன் கூட எம்.பி., எம்.எல்.ஏ. ஆனார்கள். அதேபோன்று தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தனர். இதுபோன்ற எண்ணம் உடைய இயக்கம் அ.தி.மு.க. தான்.

தனக்கு சோதனை வந்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கி அழகு பார்த்தவர், ஜெயலலிதா. உங்களால் அப்படி செய்ய முடியுமா? உங்கள் கட்சியில் தான் விடுவீர்களா?. ஆட்சியில் மட்டுமல்ல, கருணாநிதி இருக்கும் வரையில் தி.மு.க.வில் ஸ்டாலின் தலைவராக வில்லை. தந்தையே தலைவராக்காத போது எப்படி நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர் சரியாக செயல்படமாட்டார் என்று கருதி தலைவர் பதவி கொடுக்கவில்லை. செயல் தலைவராகவே இருந்தார். மறைவுக்கு பின்னர் தலைவராகி இருக்கிறார்.

கானல் நீராக போகும்

தி.மு.க. ஒரு கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மறைந்து விட்டார் ஆட்சியை கலைத்துவிடலாம் என்று திட்டம்போட்டனர். அது நிறைவேறவில்லை, அதன் பிறகு கட்சியை உடைக்க போட்ட திட்டமும் நிறைவேறவில்லை. இன்று 3-வது திட்டமாக, இவர்கள் மீது புகார் செய்தால், மக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படாதா என்கிற மனக்கோட்டை கட்டி ஆயுதத்தை எடுத்துள்ளனர். இதுவும் அவர்களுக்கு தோல்வி தான்.

நாம் ஆட்சி அமைத்து ஒரு ஆண்டு 8 மாதம் ஆகிவிட்டது. நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் இது உயிரோட்டம் உள்ள இயக்கம். இருபெரும் தலைவர்கள் தெய்வமாக இருந்து வழிநடத்துகிறார்கள். கட்சியையும், ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. உங்களது கனவு பகல் கனவாகவும், கானல் நீராகவும் தான் இருக்கும்.

கம்பெனி கட்சி நடத்துபவர்கள் அ.தி.மு.க.வை பார்த்து பேச என்ன தகுதி இருக்கிறது. தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்சியும், ஆட்சியும் நிலைத்துநிற்க தன்னையே அர்ப்பணித்து கொண்ட இயக்கம் அ.தி.மு.க. ஆகும். ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுகின்ற அரசு இதுவாகும்.

நமது இருபெரும் தலைவர்கள் நாட்டு மக்களுக்காக உழைத்தார்கள். அவர்களை பேச யாருக்கும் தகுதி இல்லை. இன்றைக்கு தி.மு.க. அடிக்கடி பா.ஜனதா கட்சி மோசமான கட்சி என்று தெரிவித்து வருகின்றனர். இதை சொல்வதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இருக்கிறதா?. 1999-ம் ஆண்டு ஜெயலலிதா பா.ஜனதாவை ஆதரித்தார். பின்னர் வாபஸ் பெற்றார்.

அப்போது கருணாநிதி அவர்களோடு இணைந்தார். நீங்களா மதசார்பின்மை இல்லாத கட்சி. ஆக அதிகாரம் பதவி தான் அவர்களுக்கு முக்கியம். 2004-ம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தனர்.

எங்களை பொறுத்தவரை நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. ஆக நாங்கள் எதுவும் பேசலாம். கொள்கையுடன் இருக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தமிழக மக்களுக்கு எந்த கட்சி நன்மை செய்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமை மிக்க இயக்கமாகும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வெற்றியை தேடி தந்தது போன்று ஜெயலலிதாவின் அரசுக்கும் தருவீர்கள் என்று நம்புகிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரிை-யும் சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மிகப்பெரிய பலம் பொருந்திய கட்சி என்பதை நிரூபித்து காண்பிக்க முடியும். அப்போது தான் நமது மக்களின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story