எஸ்.பி.பட்டினத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி; அதிகாரிகள் ஆய்வு
எஸ்.பி.பட்டினத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல மாவட்டத்தில் உள்ள 58 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.35,000 மதிப்பில் குப்பை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 6 ஆதிதிராவிட நலத்துறை மாணவர் விடுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர தலா ரூ.2 லட்சம் மதிப்பில் சுமார் 200 ஊருணிகளை ஆழப்படுத்த மாவட்ட கலெக்டர் மூலம் திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் பணிகளையும், ஊருணிகள் ஆழப்படுத்தும் பணிகளையும் ஓ.என்.ஜி.சி. நிறுவன டெல்லி தலைமை அலுவலக துணை பொது மேலாளர் அனில்குமார், சென்னை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் கோபிநாத் ஆகியோர் வந்திருந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவின் பேரில் திட்ட இயக்குனர் ஹென்சி லீமா அமாலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆகியோர் திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் திருப்பாலைக்குடியில் ஊருணிகளை பார்வையிட்டனர்.