தனுஷ்கோடியில் மணல் திட்டுக்கு இடம்பெயரும் பறவைகள்
தனுஷ்கோடியில் மணல் திட்டுக்கு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடியில் உள்ள பாலம், கம்பிப்பாடு ஆகிய பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி சென்று புயலால் அழிந்து போன கட்டிடங்களையும், 2 கடல் சங்கமிக்கும் கடல் பகுதியான அரிச்சல்முனை கடல் பகுதியையும் பார்த்து ரசித்து விட்டு திரும்புவர்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் காவா என்று சொல்லக் கூடிய கடல் புறாக்கள், உல்லான் குருவி, கோட்டா என்னும் நாரை, நீர்க்காம், கொக்குகள் உள்ளிட்ட பல விதமான பறவைகள் கடற்கரையை தங்களது வாழிடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன. அதிலும் கடல் புறாக்கள் கடற்கரை பகுதி மணலிலேயே முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து வாழ்கின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் கடல் புறாக்கள் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது.அதற்காக தனுஷ்கோடிஎம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை கடற்கரை பகுதியில் கன்னி வலைகளை புதைத்து வைத்து பறவைகளை வேட்டையாடி வருகின்றனர்.
இதனால் ஏராளமான பறவைகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மணல் திட்டுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. எனவே இதுகுறித்து வனத்துறையினர் தனுஷ்கோடி பகுதியில் பறவைகளை வேட்டையாடி வரும் நபர்களை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.