நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி - கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அவற்றை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் போதுமான அளவு கலக்கப்பட்டு உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் உள்பட சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story