வருகிற 24–ந் தேதி அரசு விழா; மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தை சப்–கலெக்டர் ஆய்வு
வருகிற 24–ந்தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக நடைபெறுவதையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மணி மண்டபத்தை சப்–கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்,
சுதந்திர போராட்டத்தில் மருதுபாண்டியர்களை வெள்ளையர்கள் கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24–ந்தேதி திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் அரசு விழாவாகவும், காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவு இடத்தில் அக்டோபர் 27–ந்தேதி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு வருகிற 24–ந் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது மணி மண்டபம் மற்றும் பஸ் நிலையத்தில் அவர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் ஆகியவற்றை நேற்று சப்–கலெகடர் ஆஷாஅஜீத் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மணிமண்டபம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடம் ஆகியவைகள் வர்ணம் பூசப்பட்டு தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணியையும் சப்–கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்பத்தூரில் பட்டாசு கடைகளுககு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ள கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெகடர் கீதா, தாசில்தார் தங்கமணி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தங்கத்துரை, வருவாய் ஆய்வாளர் பழனிககுமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.