வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்-லைன் பரிவர்த்தனை கலெக்டர் தகவல்
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்-லைன் பரிவர்த்தனை செய்யப்படும் என்று கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார். கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு,
தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து கழகங்களில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் வாகன பதிவு கட்டணம், வரி செலுத்துதல் ஆகியவை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கடந்த 1-ந் தேதி முதல் பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், முகரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் மனுதாரர்கள் ஆன்-லைன் மூலம் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே கட்டணம் செலுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி https://pa-r-iv-a-h-an/gov.in/ sar-at-h-is-e-rv-i-c-e-c-ov6/sar-at-h-i-H-o-m-e-Pu-b-l-ic.do இணையதளம் மூலம் விண்ணப்பித்து சேவை தொகையை ஆன்-லைன் பரிவர்த்தனை செய்ய முடியும்.
பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் மனு பெற்று பூர்த்தி செய்து கட்டணத்தையும் ஆன்-லைன் பரிவர்த்தனையாக செலுத்தலாம்.
ஆன்-லைனில் செலுத்திய கட்டணத்துக்கான ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று உரிய தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
இந்த நடைமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் அதுசார்ந்த நடைமுறைகளுக்கு ஆன்-லைன் பரிவர்த்தனையை பயன்படுத்தி, கால விரயத்தை தடுக்கலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிப்படியாக வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் ஆன்-லைன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனையாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story