சிக்குன்குன்யா காய்ச்சலால் யாரும் அச்சப்பட தேவையில்லை; சுகாதார இயக்குனர் சொல்கிறார்
சிக்கன்குன்யா காய்ச்சலால் யாரும் அச்சப்பட தேவையில்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று சுகாதார இயக்குனர் ராமன் சொல்கிறார்.
பாகூர்,
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பேட் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குப்பம்மாள் (வயது 75) புதுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்தநிலையில் கடந்த 15–ந்தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு, வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குப்பம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலால் மூதாட்டி இறந்த சம்பவம் பிள்ளையார்குப்பம்பேட் கிராம பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இந்த கிராமத்தில் மேலும் பலருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக தெரியவந்தது. இது பற்றி அறிந்தவுடன் அமைச்சர் கந்தசாமி சுகாதார இயக்குனர் ராமனிடம் பிள்ளையார்குப்பம்பேட் பகுதியில் மீண்டும் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து புதுவை அரசு ஆஸ்பத்திரி, கதிர்காமம் மருத்துவக்கல்லூரி, ஜிப்மர், அறுபடை, மகாத்மா காந்தி ஆகிய மருத்துவக்கல்லூரிகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நேற்று பிள்ளையார்குப்பம்பேட் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மருத்துவ முகாம் அமைத்தனர்.
முகாமில் 110 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சிலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமின்போது அமைச்சர் கந்தசாமி, சுகாதார இயக்குனர் ராமன், இணை இயக்குனர் கணேசன் உள்பட அதிகாரிகள் பலர் பார்வையிட்டனர்.
அப்போது சுகாதார இயக்குனர் ராமன் கூறுகையில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சிக்குன்குன்யா காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த காய்ச்சல் குணம் ஆனாலும் மூட்டு வலி இருக்கும். இதற்காக யாரும் அச்சப்பட தேவையில்லை. மூட்டு வலி அதிகம் இருந்தால் இந்த கிராமத்தில் உள்ள தாய்சேவை மையத்தில் தினந்தோறும் ஒரு டாக்டர் இருப்பார். அவரிடம் உரிய சிகிச்சை பெறலாம். இதற்காக யாரும் அச்சப்பட தேவையில்லை’ என்றார். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை கிருமாம்பாக்கம் சுகாதார நிலைய அதிகாரி நாராயணன், டாக்டர்கள் மாதவன், ஜடகோபன் ஆகியோர் செய்திருந்தனர்.