காட்டு யானையை பிடிக்க கம்பம் வன அலுவலகத்துக்கு வந்த கும்கிகள்
தேவாரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க கம்பம் வன அலுவலகத்துக்கு 2 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளன.
கம்பம்,
தேனி மாவட்டம் தேவாரம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள எள்ளுபாறை, தாழையூத்து, சாக்கலூத்து மெட்டு உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுயானை ஒன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அந்த யானை தாக்கியதில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் தோட்ட வேலைக்கு செல்ல மிகவும் அஞ்சி வருகின்றனர்.
இந்த காட்டுயானையை பிடிக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த யானையை பிடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி டாப்சிலீப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் தேவாரம் மலையடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் முகாமிட்டு காட்டுயானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது அந்த காட்டுயானை கேரள மாநில வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றது. இதற்கிடையே யானைகள் இனப்பெருக்க காலம் தொடங்கியது. இதையடுத்து யானைகளை மீண்டும் பொள்ளாச்சி டாப்சிலீப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. காட்டுயானையை அந்த பகுதிக்குள் வரவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் காட்டுயானை தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து காட்டுயானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் அறிவித்தனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கு வனத்துறையினர் நேரில் சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் காட்டுயானையை பிடிக்க மீண்டும் கும்கி யானைகளை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசிம், விஜய் என்ற 2 கும்கி யானைகள் லாரிகள் மூலம் நேற்று கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த யானைகள் கம்பம் வனத்துறை அலுவலகத்தின் பின்புறம் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வசிம் கும்கி யானைக்கு 39 வயதும், விஜய் கும்கி யானைக்கு 47 வயதாகிறது. இந்த கும்கி யானைகள் 2 நாட்கள் இந்த பகுதியில் தங்க வைக்கப்படும். அதன்பின்னர் தேவாரம் மலையடிவார பகுதிக்கு கொண்டு செல்லப்படும். காரணம் பொதுவாக யானைகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நுகரும் சக்தி வாய்ந்தது. அதன்மூலம் வேறு யானைகள் இருப்பதையும், மனிதர்கள் நடமாட்டத்தையும் தெரிந்து கொள்ளும். அதில் ஒரு சில யானைகள் தன்னுடைய இனம் இருப்பதை அறிந்து அந்த பகுதிக்கு வரும். இன்னும் சில யானைகள் தங்களுடைய பாதையை மாற்றி வேறு இடத்துக்கு சென்றுவிடும். கடந்த முறை கொண்டு வரப்பட்ட கும்கி யானைகள் வருகையை தெரிந்து கொண்ட காட்டுயானை வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து சென்றது. எனவே தான் இந்த முறை தேவாரத்துக்கு கும்கி யானைகளை உடனே கொண்டு செல்லாமல் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story