ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2018 9:30 PM GMT (Updated: 17 Oct 2018 8:53 PM GMT)

ஈரோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடை அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் தலைமை தாங்கினார். ஈரோடை அமைப்பின் நிறுவனரும், ஈரோடு சுதா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஈரோடு ஸ்டோனி பாலத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ரெயில் நிலையம், காளைமாட்டுசிலை, காந்திஜிரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பிரப்ரோடு வழியாக சென்று சி.எஸ்.ஐ. மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஜே.கே.கே.எம்., அன்பு ஆகிய செவிலியர் கல்லூரிகளின் மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியவாறும் நடந்து சென்றனர்.

முன்னதாக ஸ்டோனி பாலம் அருகில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் கதிரவன் திறந்து வைத்து பார்வையிட்டார். கொசு உற்பத்தியாகும் விதம், அதற்கான இடங்கள், அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியன பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் தங்கவேலு, ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story