மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு; வீணாகிய தண்ணீர்


மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு; வீணாகிய தண்ணீர்
x
தினத்தந்தி 18 Oct 2018 4:45 AM IST (Updated: 18 Oct 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

மேட்டூர்,

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி மற்றும் வழியிடை கிராமங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் கோம்புரான்காடு சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் ஆத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் நடக்கிறது. இந்த குடிநீர் திட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து நாள்ஒன்றுக்கு 65 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டூர்-நங்கவள்ளி மெயின்ரோட்டில் வீரக்கல் என்ற இடத்தில் இந்த குடிநீர் திட்ட குழாயில் நேற்று காலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வீணாகியது.

இது குறித்து தகவல் அறிந்ததும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மேட்டூரில் இருந்து நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் ஏற்றும் பணியை உடனடியாக நிறுத்தினர். பின்னர் குழாய் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன்காரணமாக ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் நேற்று குடிநீர் வினியோகம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story