அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:15 AM IST (Updated: 18 Oct 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் தஞ்சை டவுன் போலீஸ் நிலைய ரோட்டில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரந்தை திராவிட கூட்டுறவு நகர வங்கி முன்னாள் தலைவர் பஞ்சாபிகேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

உன் முகத்தை காட்டு 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று எம்.ஜி.ஆரை பற்றி அண்ணா சொன்னார். உன்னால் தான் முதல்-அமைச்சர் ஆனேன் என்று கருணாநிதியே சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவின் சொல்லாற்றல், கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தார். தி.மு.க. வளர அடித்தளம் இட்டவர்.

தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆகலாம் என்று வித்திட்டவர் அண்ணா. ஆனால் அவரது மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்ற கருணாநிதி, தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆரின் புகழை கண்டு பயந்த அவர், தனது மகனை திரைஉலகிற்கு கொண்டு வந்தார்.அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது 100 நாள் கூட நீடிக்காது என்று சொன்னார்கள். ஊழலுக்கு வித்திட்டவர்களே கருணாநிதி குடும்பத்தினர் தான். ஏதோ ஊழலே செய்யாதது போல் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. ஊழல் இல்லாத ஆட்சியை எம்.ஜி.ஆர். தந்தார். பஸ் வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தினார். நியாயவிலைக்கடைகளை கொண்டு வந்து குறைந்த விலைக்கு அரிசி, பருப்பு, மண்எண்ணெய் வழங்கினார்.

நான் இறந்த பின்னரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. இருக்கும் என்று எம்.ஜி.ஆர். கூறினார். அவரது மறைவுக்கு பிறகு 28 ஆண்டுகள் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்து வழிநடத்தினார். யார் வேண்டுமானாலும் இந்த கட்சிக்கு தலைவர் ஆகலாம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உறவினர்களை கட்சிக்கு வர ஊக்குவிக்கவில்லை. மக்கள் இயக்கமாக வழி நடத்தினார்கள்.

தி.மு.க.வை ஒரு குடும்பம் கபளகரம் செய்வதைபோல அ.தி.மு.க.வை யாரும் கபளகரம் செய்ய முடியாது. அதற்கு எந்தவொரு தொண்டனும் விடமாட்டான். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அ.தி.மு.க. நிலைக்க பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் பாண்டியராஜன், துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், காவேரி சிறப்பு அங்காடி முன்னாள் தலைவர் பண்டரிநாதன், வட்ட செயலாளர் முருகேசன், சண்முகா நகர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Next Story