போலீசார் வீரவணக்கநாளையொட்டி தஞ்சையில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


போலீசார் வீரவணக்கநாளையொட்டி தஞ்சையில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2018 10:30 PM GMT (Updated: 17 Oct 2018 9:57 PM GMT)

போலீசார் வீரவணக்க நாளையொட்டி தஞ்சையில் மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

போலீசார் வீர வணக்க நாளையொட்டி மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. இதனை கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

முன்னதாக பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு இறந்த போலீஸ்காரர்களுக்காக, கலெக்டர் தலைமையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி போலீசார் வீர வணக்கநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த போலீஸ்காரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டில் அனைவரும் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ உள்நாட்டில் போலீசாரும், எல்லைப்பகுதிகளில் ராணுவத்தினரும், தங்கள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணியின் போது எதிரிகளால் தாக்கப்பட்டு இறக்கின்ற காவலர்களின் மேன்மையை நாம் அனைவரும் போற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாரத்தான் ஓட்டம் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே திருச்சி சாலையில் தொடங்கி சரபோஜி கல்லூரி வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்தை வந்தடைந்தது. இதில் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், பாலசந்தர், ரவிசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story