தர்மபுரியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
தர்மபுரியில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது.
தர்மபுரி,
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழாவின்போது வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தூய்மைப்படுத்தபடுவது வழக்கம். ஆயுத பூஜை நாளில் வீடுகளில் தினமும் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கருவிகளையும் சுத்தம் செய்து அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் பழங்கள், பொரி கடலை, சுண்டல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
ஆயுதபூஜை விழாவையொட்டி தர்மபுரி நகரில் சாம்பல் பூசணி, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழவகைகள், வாழை மரம், மாவிலை, பொரிகடலை உள்ளிட்ட பூஜைபொருட்கள் விற்பனை நேற்று அமோகமாக நடந்தது. இந்த பொருட்களை வாங்க தர்மபுரி நகரில் உள்ள கடைவீதிகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர். முக்கிய சாலைகளில் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து அதிகரித்தது.
பூஜையில் பயன்படுத்தப்படும் வாழைப்பழ விற்பனையும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஏலக்கி வாழைப்பழம் ரூ.70-க்கு விற்பனையானது. பூவன்பழம் ஒரு தார் ரூ.500 முதல் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்தது. ஆயுத பூஜையில் திருஷ்டி பரிகாரம் செய்ய பயன்படுத்தப்படும் சாம்பல்பூசணி விற்பனையும் அமோகமாக இருந்தது. ஒரு கிலோ சாம்பல் பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆயுத பூஜையில் முக்கிய அங்கம் வகிக்கும் சாமந்திபூ விலை கடந்த சில வாரங்களாக வீழ்ச்சி அடைந்திருந்தது. ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜை காரணமாக சாமந்தி பூக்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் நேற்று ஒரு கிலோ சாமந்திபூவின் விலை ரகத்திற்கு ஏற்றாற்போல் ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தர்மபுரி பூ மார்க்கெட்டிற்கு சாமந்தி பூக்களை அதிக அளவில் கொண்டு வந்தனர்.
Related Tags :
Next Story