வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன் : கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை மானியத்தில் கடன் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி,
தொழில் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் உற்பத்தி சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் தொடங்குவதற்கு அதிகபட்சம் உற்பத்தி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் வரையும், சேவை நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் வரையும், வியாபார நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் வரையும் 25 சதவீத மானியத்துடன் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும், விண்ணப்பம் செய்வதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. சிமெண்டு ஹாலோ பிளாக் கற்கள், நடைபாதை டைல்ஸ், மரச்சாமான்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள், பேக்கரி கார வகைகள் தயாரிப்பு, உணவு எண்ணெய், முந்திரி பருப்பு பதப்படுத்துதல் போன்ற உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கணினி சார்ந்த நிறுவனங்கள், உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம், உணவகம் போன்ற சேவை நிறுவனங்கள் தொடங்க முன் வரலாம்.
தொழில் அனுபவத்துடன் ஆரம்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் இந்த நேர்முகத் தேர்வுக்கு அனைத்து ஆவணங்களுடன் வர வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்கள் தங்கள் வங்கியில் லாபம் தரக்கூடிய திட்டங்களுக்கு கொடுக் கக்கூடிய ரூ.10 லட்சம் வரையிலான முத்ரா திட்ட கடன்களையும் இதில் இணைத்து மானியம் பெற்றுக் கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் தொழில் திறமை மற்றும் அனுபவம் உள்ள படித்த பட்டதாரி இளைஞர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story