பல்லடம் : சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பறிமுதல்


பல்லடம் : சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Oct 2018 4:08 AM IST (Updated: 18 Oct 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பற்றி விவரம் வருமாறு:-

பல்லடம்,


திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால் ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்து செல்கிறார்கள். இங்கு பத்திரப்பதிவு அதிகாரியாக செல்வகுமார் (வயது 53) என்பவர் பணியாற்றி வருகிறார். கோவை மாவட்டம் சூலூரில் வசித்துவரும் இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி ஆகும். இவர் கடந்த 1-8-2018 முதல் இங்கு பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கவுசல்யா, வெங்கடேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். இதையொட்டி சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவு மூடப்பட்டது. வெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் உள்ளே இருந்தும் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பல்வேறு ஆவணங்களையும் ஆய்வுசெய்தனர்.

இந்த சோதனையின் போது பத்திரப்பதிவு அலுவலர் செல்வகுமாரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 650-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபோல் அங்கு கடந்த 3-8-2017 முதல் தற்காலிக இணை சார் பதிவாளராக பணியாற்றி வந்த உடுமலை நேருவீதியை சேர்ந்த ஆனந்தி (52) என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.30 ஆயிரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story