உஷாரய்யா உஷாரு..
உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலை, நகரின் ஒதுக்குப்புற பகுதியில் பரந்த இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலை, நகரின் ஒதுக்குப்புற பகுதியில் பரந்த இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அங்கே வேலைபார்த்துக்கொண்டிருந்தார்கள். விதவிதமான உணவுப் பொருட்கள் அங்கே தயார்செய்யப்பட்டு, அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த தொழிற்சாலையில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரவேண்டும் என்றால் மூன்று கி.மீ. தூரம் நடக்கவேண்டும். அந்த வழியில் ஆங்காங்கே சில வீடுகள் இருந்தன. அடிப்படை வசதியில்லாத அந்த வீடுகளில் ஏழை மக்கள் வசித்து வந்தார்கள். அந்த வீடுகளை தாண்டித்தான், தொழிலாளர்களான இளைஞர்கள் நடந்துசென்று கொண்டிருப்பார்கள்.
அதில் ஒரு வீட்டில் 6 மாத கைக்குழந்தையுடன் அவள் தங்கியிருந்தாள். அது அவளது பெரியம்மாவின் வீடு. பெரியம்மாவும், பெரியப்பாவும் கூலி வேலைக்கு செல்பவர்கள். அவர்கள் தினமும் வேலைக்கு செல்லும்போது இவளை வீட்டில்வைத்து பூட்டிவிட்டு செல்வார்கள். வாழ்க்கையில் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்த வேதனை அவள் முகத்தில் தெரிந்தது. அவள் பூட்டப்பட்ட கிரில் கேட் வழியாக அவ்வப்போது சாலையை வெறித்துபார்த்தபடி நின்றுகொண்டிருப்பாள்.
தொழிற்சாலையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அந்த வழியாக செல்லும்போதெல்லாம் அவளை கவனித்தான். ‘அவள் திருமண வயதை எட்டவில்லை. அவளுக்கு திருமணமும் ஆகியிருக்கவில்லை. ஆனால் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள்’ என்பதை அவன் புரிந்துகொண்டான். அவளிடம் பேச முயற்சித்தான். ஆனால் தொடக்கத்தில் அவள் அவனிடம் முகம்கொடுத்து பேசவில்லை. விலகித்தான் போனாள். அவனோ பால், பழம், பிஸ்கெட் போன்றவைகளை வாங்கிவந்து அந்த கிரில் கேட்டின் உள்பக்கமாக வைத்துவிட்டுச் செல்வதை வாடிக்கையாக்கினான். அவளுக்கும், குழந்தைக்கும் அந்த உணவுகள் தேவைப்பட்டன.
காலப்போக்கில் அவன் அன்பானவன் என்று நினைத்து, அவனிடம் மனம்விட்டுப் பேசினாள். ‘பிளஸ்-டூ படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளிக்கு அருகில் வேலைபார்த்த மெக்கானிக்குடன் காதல்வசப்பட்டு கர்ப்பிணியாகிவிட்டதாகவும்- காலம் கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாததால் தனது தாயார் இங்கே கூட்டிவந்து தன்னை விட்டுவிட்டதாகவும்- இங்கேயே ஒரு நர்சைவைத்து பிரசவம் பார்த்ததாகவும்- இந்த அவமானம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, தன்னை இங்கே வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும்’ அவனிடம் சொன்னாள்.
அவனும் பரிவுடன் கேட்டுவிட்டு, ‘எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. உன்னை நான் முறைப்படி திருமணம் செய்துகொண்டு, குழந்தையையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றான். அவள், அது பற்றி தனது பெரியம்மாவுடன் பேசும்படி சொன்னாள்.
அவனும், அவர்களை சந்தித்து தனக்கு அவளை திருமணம் செய்துதரும்படி கேட்டான். ‘எப்படியாவது தொல்லைவிட்டால் போதும்’ என்ற மனநிலையில் இருந்த அவர்கள், அவனுக்கு பதிவு திருமணம் செய்துகொடுத்து, அந்த பகுதியிலே ஒரு வாடகை வீட்டில் குடிவைத்தார்கள். அவன் மாத சம்பளத்தை ஒழுங்காக அவள் கையில் கொண்டு வந்து கொடுத்து அவளது நம்பிக்கையை பெற்றான். அவளுக்கும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது. கவலையாக காட்சியளித்த அந்த குழந்தையும் உடல்நிலை தேறி தவழத் தொடங்கியது.
அன்று அவளது பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. அவன் வீட்டில் ஓய்வில் இருந்தான். குழந்தையை அவனது பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அவள், பெரியம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள். அங்கு பரிசோதனை, சிகிச்சை என்று தாமதமாகிவிட்டது.
இரவு வீடு திரும்பினாள். வீட்டில் கணவனும், குழந்தையும் இல்லை. தேடினாள். நாட்கள் கடந்தன. இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. முறையற்ற விதத்தில் குழந்தை பிறந்ததால் போலீசில் புகார் கொடுக்க அவளது பெரியம்மா சம்மதிக்கவில்லை. ‘புகார் கொடுத்தால் குழந்தை எப்படி பிறந்தது? என்ற கேள்வி வரும். எங்களையும் சேர்த்து விசாரிப்பார்கள். உன்னோடு சேர்ந்து நாங்களும் அவமானப்படவேண்டியதிருக்கும். அதனால் நடந்ததை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு, உன் அம்மாவிடம் போய் சேர்ந்துவிடு’ என்று பஸ் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டார்! அவன் திட்டமிட்டு குழந்தையை கடத்தியிருக்கிறான்!
பட்டகாலிலே படும் என்று அவள் எதையும் வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளே அழுது புலம்பிக்கொண்டிருக்கிறாள்!
- உஷாரு வரும்.
Related Tags :
Next Story