கனவு நாயகி
புகையும் சிகரெட்டுடன் எழுந்து உதடுகள் துடிக்க அவளைப் பார்த்து, ‘‘ஆமாம். அப்படித்தான் சொன்னேன்.
முன்கதைச் சுருக்கம்:
அபிநயா 40 படங்கள் முடித்த பிரபல நடிகை. பணம் செட்டில் செய்தால்தான் டப்பிங் பேசுவேன் என்று கறாராக ஒரு தயாரிப்பாளரிடம் போனில் பேசும் அபிநயா படப்பிடிப்புக்குத் தாமதமாக வருகிறார். அவரை திமிர் பிடித்தவள் என்று விமர்சித்த ஹீரோ இனியவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார்.
புகையும் சிகரெட்டுடன் எழுந்து உதடுகள் துடிக்க அவளைப் பார்த்து, ‘‘ஆமாம். அப்படித்தான் சொன்னேன். மன்னிப்பெல்லாம்கேக்க முடியாது. இப்ப என்ன செய்யணும்ங்கறே?’’ என்றார் இனியவன்.
அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாற்காலியில் அமர்ந்து கையைக் கட்டிக்கொண்டார் அபிநயா.
தன் வழுக்கை மண்டையைத் தடவிக்கொண்ட இயக்குனர் ராகவன் அவளிடம் வந்து கெஞ்சலாக, ‘‘ஏற்கனவே நேரம் போயிட்டிருக்கும்மா.. வேலை பார்ப்போமே..பாரும்மா.. எத்தனைப் பேர் காத்திருக்காங்க’’ என்றார்.
‘‘சார்.. நான் பதில் சொல்ல வேண்டியது தயாரிப்பாளருக்கும், இயக்குனர் உங்களுக்கும்தான். தாமதமா வந்ததுக்கு காரணமும் சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன். இவரு யாரு என்னைப்பத்தி விமர்சனம் செய்றதுக்கு?’’
‘‘ஏதோ தெரியாம சொல்லிட்டார். விட்ரும்மா’’
‘‘அதுக்குதான் சார் மன்னிப்பு கேக்கச் சொல்றேன்’’
கொஞ்சம் தள்ளி தன் காரில் சாய்ந்து நின்றபடி சிகரெட் பிடித்த இனியவனிடம் ஓட்ட நடையில் வந்தார் ராகவன்.
‘‘தம்பி.. அவ பிடிவாதம்தான் உனக்குத் தெரியுமே..நேரம் போயிட்டிருக்கு. இன்னிக்கு இந்தக் காட்சியை முடிச்சாகணும்’’
‘‘அதுக்கு?’’
‘‘ஒரே ஒரு வார்த்தை சாரி சொல்லிட்டா முடிஞ்சது’’
‘‘தாமதமா வந்ததுக்கு உங்ககிட்ட சாரி சொன்னா. எங்கிட்ட சொன்னாளா சார்? அதெல்லாம் சொல்ல முடியாது சார்’’ என்ற இனியவன் போனில் தயாரிப்பாளரின் எண்ணைப் போட்டார்.
பக்கத்து படப்பிடிப்புத் தளத்தில் செய்தி சேகரிக்க வந்த முன்னணிப் பத்திரிகையின் நிருபர் ராஜராஜன் வடையை அவசரமாக மென்றபடி இங்கு வந்து சேர்ந்தார்.
பழச்சாறு பருகியபடி அலைபேசியில் சினிமா விமர்சனங்கள் படித்துக்கொண்டிருந்த அபிநயாவிடம் வந்து அவராகவே ஒரு நாற்காலி இழுத்துப் போட்டுக்கொண்டு,‘‘என்னம்மா கண்ணு பிரச்சினை?’’ என்றார்.
வேகமாக அங்கு வந்த ராகவன்,‘‘ராஜராஜன் சார்..கொஞ்சம் தயவுசெய்து எந்திரிச்சிப் போறீங்களா? எதாச்சும் வம்புக்குன்னே அலையாதீங்க..’’ என்றார்.
‘‘வம்பு நடந்தா அதை மக்களுக்குச் சொல்றதுதான் எங்க வேலை. வம்பு நடக்காம பார்த்துக்குங்க சார். படம் வெளியாகற சமயம் மட்டும் எங்களைப் பார்த்தா தெய்வம் மாதிரி தோணும். மத்த நேரத்துல கொசுவை விரட்ற மாதிரி விரட்றீங்களே..’’ என்று காட்டமாக பதில் சொன்னவர் மீண்டும் அபிநயா பக்கம் திரும்பி,‘‘நீ சொல்லு கண்ணு’’ என்றார்.
‘‘பிரச்சினை சரியாகிட்டா விட்ரலாம் சார். சரியாகலைன்னா நானே உங்களுக்குப் போன் பண்ணி செய்தி என்னன்னு சொல்றேன். இப்ப நீங்க புறப்படுங்க’’ என்றார் அபிநயா.
‘‘இப்படிப் பதமா சொன்னா போயிட்டுப் போறேன்’’ என்று கிளம்பிய ராஜராஜன் மரத்தடியில் நின்று கிசுகிசுத்துக்கொண்டிருந்த உதவி இயக்குனர்கள் பக்கம் வந்து,‘‘என்னடா பிரச்சினை? நீங்களாவது சொல்லித் தொலைங்களேண்டா? படப்பிடிப்பு ஏன் நடக்கலை?’’ என்று அவர்களின் வாயைக் கிளறத் தொடங்கினார்.
இப்போது அபிநயாவின் போன் ஒலிக்க எடுத்துப் பார்த்து,‘‘ வணக்கம் சார். சொல்லுங்க’’ என்றார்.
‘‘இப்பதான் இனியவன் பேசுனார். இயக்குனர் ராகவனும் பேசுனார். இனியவன் உன்னைப் பத்திப் பேசுனது தப்புதான்ம்மா.. ஆனா அவன் உன்னைவிட சீனியர். மன்னிப்புக் கேக்கறதெல்லாம் வேணாம். அவனை தண்டிக்கிறேன்னு நீ என்னை தண்டிச்சிடாதம்மா.. அவனுக்கு வேற வழில பாடம் கத்துக் குடுக்கலாம். என் வார்த்தையை நம்பு. இப்ப நடிச்சிக் குடுத்துடும்மா..ப்ளீஸ்..’’ என்றார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேணுகோபால்.
‘‘உங்க வார்த்தைக்காக ஒத்துக்கறேன் சார். அப்புறம் நேத்தே என் கணக்குல பணம் போடறேன்னு சொன்னிங்க. இன்னும் கணக்குல வரலையே சார்..’’
‘‘அப்படியா? ஆபீஸ்ல சொல்லிருந்தேனே.. மறந்துட்டானுங்க போலிருக்கு. எல்லாம் வெத்துப் பசங்க. பைசாவுக்குப் பிரயோஜனமில்லம்மா.. நாளைக்குக் காலையில் பண்ணிடறேன்ம்மா’’
அபிநயா போனை உதவிப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு எழுந்து இயக்குனரிடம் வந்து, “என் வசனம் என்ன சார்?’’ என்றார்.
ஆங்காங்கே ஓய்வாக உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.
ராகவனிடம் இனியவன் வந்து நின்றார்.
‘‘பாரும்மா.. உன் கணவன் ஆபீசுக்குப் போறேன்னு போனவன் தலைவலின்னு பாதிலயே திரும்பிட்டான். நீ கரிசனமா காபி போட்டுக் கொடுத்து தைலம் தேய்ச்சி விடறே.’’
‘‘நான் ரெடி சார்’’ என்றார் அபிநயா.
* * *
அந்த ஐஸ்கிரீம் கடையில் வாடிக்கையாளர்களுக்கு மெனு கார்ட் நீட்டி அவர்கள் கேட்கும் ஐஸ்கிரீம் மற்றும் நொறுக்குத் தீனி அயிட்டம்களை பில் போட்டு, நீட்டப்படும் கடன் அட்டையை இயந்திரத்தில் செலுத்தி தொகை அடித்து அவர்கள் பக்கம் திருப்பிவைத்து, அவர்கள் எண் டைப் செய்ததும் வெளியே வரும் துண்டுச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பதை மின்னல் வேகத்தில் செய்துகொண்டிருந்தான் ஆனந்தன்.
அவன் தோளில் கை வைத்தான் சக ஊழியன் திவாகர்.
‘‘ஆனந்த், இன்னிக்கு சீக்கிரம் போகணும்னு சொன்னியே.. நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்’’ என்ற திவாகரை தன் நாற்காலியில் அமரவைத்து இறங்கிக்கொண்ட ஆனந்தன் மதிய உணவு கொண்டு வந்த டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் கொண்ட சிறிய பை மற்றும் ஓரமாக வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கடையைவிட்டு வெளியே வந்தான்.
போன் எடுத்து,‘‘அமுதா நான் புறப்படறேன். இன்னும் பத்து நிமிடத்துல உன் கடையில இருப்பேன். புறப்பட தயாரா இரு’’ என்று சொல்லிவிட்டு தன் ஸ்கூட்டரைக் கிளப்பிப் புறப்பட்டான்.
ஐந்து தளங்கள் கொண்ட குளிரூட்டப்பட்ட அந்த பிரமாண்டமான ஜவுளிக் கடையில் பெண்களுக்கான மூன்றாவது மாடியில் விற்பனைப் பெண்கள் ஒரே மாதிரியான டிசைனில் புடவை உடுத்தி மார்பில் பெயர் வில்லை குத்தியிருந்தார்கள்.
அமுதா தன் சூபர்வைசர் நந்தினியிடம் வந்தாள்.
‘‘புறப்படறீயாம்மா?’’ என்றாள் நந்தினி.
‘‘ஆமாம் மேடம்’’
‘‘எந்த ஊர்லேர்ந்து வர்றாங்கன்னு சொன்னே?’’
‘‘சென்னைதான் மேடம்.’’
‘‘மாப்பிள்ளை என்ன செய்றாரு?’’
‘‘பாத்திரக் கடை வெச்சிருக்காரு மேடம்’’
‘‘நாளைக்கு நல்ல செய்தி சொல்லணும். போய்ட்டு வா’’ கை குலுக்கி அவள் அனுப்பிவைக்க..அமுதா கடைக்கு வெளியில் சாலையில் காத்திருந்த ஆனந்தனின் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டாள்.
‘‘ஸ்வீட், காரம், பால் பாக்கெட், பூ, பழம் எல்லாம் வாங்கிட்டேன். உனக்கு புருவம் திருத்திக்கணும்னு சொன்னேல்ல? போறப்ப செஞ்சிட்டுப் போயிடலாமா அமுதா?’’ வண்டியை ஓட்டியபடியே கேட்டான் ஆனந்தன்.
‘‘பரவால்லண்ணா.’’
‘‘முதல்லயே போட்டோ அனுப்பி அவங்களும் பாத்தப்பறம்தான் நேர்ல வர்றாங்க. அதனால அநேகமா அமைஞ்சிடும் அமுதா. நான் ஆசைப்பட்ட மாதிரியே உள்ளூர்லயே மாப்பிள்ளை அமையப் போறதுல எனக்கு ஏகப்பட்ட சந்தோஷம்’’
‘‘ஆமாண்ணா’’
‘‘என்ன குரல் டல்லா இருக்கு?’’
‘‘கொஞ்சம் பயமா இருக்குண்ணா’’
‘‘என்ன பயம்?’’
‘‘ஒரு பெரிய விஷயத்தை அவங்ககிட்ட நீ மறைச்சிருக்கியே? அதை நினைச்சாதான் பக்குன்னு இருக்கு’’ என்றாள் அமுதா.
சரக்கென்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்திய ஆனந்தன் திரும்பி அமுதாவின் முகம் பார்த்து,‘‘உண்மையைச் சொன்னா உனக்குக் கல்யாணம் நடக்குமா அமுதா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு! இது தப்பில்ல..நீ தைரியமா இருக்கணும். அதான் முக்கியம்’’ என்றான்.
-தொடரும்
Related Tags :
Next Story