கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி: மேலும் 2 பேர் கதி என்ன? தீவிர தேடுதல் வேட்டை
கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் குளித்த 4 மாணவர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர்கள் பாஸ்கர் மகன் சஞ்சய்(வயது 14). சேகர் மகன் மணிகண்டன்(17). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். தியாகராஜன் மகன் வெங்கடேசன்(18). இவர் பாபநாசம் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
குமார் மகன் விஷ்ணுவர்தன்(13). இவன், கபிஸ்தலம் அருகே உள்ள வடகுரங்காடுதுறையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பாலகிருஷ்ணன் மகன் சிவபாலன்(15). இவர் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கருப்பையன் மகன் நவீன்(14). இவன் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சாமிநாதன் மகன் கதிரவன்(17). கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மதியம் 1 மணி அளவில் சஞ்சய், மணிகண்டன், வெங்கடேசன், விஷ்ணுவர்தன், சிவபாலன், நவீன், கதிரவன் ஆகிய 7 பேரும் கபிஸ்தலம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றின் கரையில் முனியாண்டவர் கோவில் அருகே உள்ள ஒரு படித்துறையில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் எதிர்பாராத விதமாக 7 பேரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதில் சஞ்சய் மட்டும் தண்ணீரில் தத்தளித்தபடி கரையேறினார். அவர் கரைக்கு வந்து பார்த்தபோது, தன்னுடன் குளித்த நண்பர்களை காணாதது கண்டு அவர்களை தேடினார். ஆனால் அவர்கள் யாரையும் காணவில்லை. அவர்கள் அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சஞ்சய் கதறி அழுதபடியே வீட்டிற்கு வந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த அவர்கள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு காவிரி கரைக்கு ஓடிச்சென்று தேடிப்பார்த்தனர். பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ் தலைமையில் வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர். அப்போது மணிகண்டனின் உடல் அங்கிருந்த மதகு அருகில் நாணல்களுக்கு இடையே சிக்கி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவருடைய உடலை மீட்டனர். மேலும் அதன் அருகே இருந்த வெங்கடேசன், விஷ்ணுவர்தன் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன. ராமானுஜபுரம் தடுப்பணைக்கு முன்பு நவீன் உடல் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவபாலன், கதிவரன் ஆகிய 2 பேர் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்றுக்கு குளிக்கச்சென்ற 4 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கபிஸ்தலம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story