இறந்து போன மகனின் பிறந்த நாளில் குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை: குடியாத்தம் அருகே பரிதாபம்


இறந்து போன மகனின் பிறந்த நாளில் குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை: குடியாத்தம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 20 Oct 2018 3:00 AM IST (Updated: 19 Oct 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே இறந்து போன மகனின் பிறந்த நாளில் அவனது தம்பியை கொன்று விட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடியாத்தம், 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 42), 6-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளர். இவருடைய மனைவி பரிமளா (32). இவர்களின் மூத்தமகன் நிக்கேஷ் (7), இளைய மகன் நிகில் (3). நிக்கேஷ் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

நிக்கேஷ் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் திருவேங்கடம், பரிமளா ஆகியோர் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இறந்து போன நிக்கேசின் பிறந்த நாள். இதனால் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் கேக் வெட்டி நிக்கேஷ் பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் நிக்கேசின் பிறந்தநாளை நினைவு கூறி இனிப்பு, கேக் வழங்கினர்.
நாள் முழுவதும் மகனின் நினைவுகளில் மூழ்கி கிடந்த அவர்களால் மகனை மறக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

தங்களின் 3 வயது மகன் நிகிலை தூக்கில் தொங்கவிட்டு, திருவேங்கடம், பரிமளா ஆகியோர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story