களக்காடு: முண்டந்துறை காப்பகத்தில் 50 யானைகள், 80 சிறுத்தைப்புலிகள் - கணக்கெடுப்பில் தகவல்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 50 யானைகள், 80 சிறுத்தைப்புலிகள் உள்ளதாக, காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 1988-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. இங்கு 448 அரியவகை மூலிகை தாவரங்களும், 103 வகை விலங்கு இனங்களும் உள்ளன. இப்பகுதியில் வாழும் வனவிலங்கு இனங்கள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தொடங்கி, 18-ந் தேதி வரை நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, எச்சங்கள், கால் தடங்களை சேகரித்தல் மற்றும் அடையாளங்களை பதிவு செய்வது போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தினர். கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்பட்ட எச்சங்கள், கால்தடங்கள் மரபணு சோதனைக்காக டேராடூனில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும் ஆங்காங்கே வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கணக்கெடுப்பின்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைப்புலிகள், 50 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு புலிகளை விட சிறுத்தைப்புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது தெரியவந்துள்ளது. சிறுத்தைப்புலிகள் 12 வயது முதல் 17 வயது வரை உயிர் வாழும்.
கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் 2 ஆயிரத்து 487 சிறுத்தைப்புலிகள் இருந்தன. அதில் தமிழக வனப்பகுதிகளில் மட்டும் 815 சிறுத்தைப்புலிகள் வசிக்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story