குலசேகரன்பட்டினத்தில்: மாயமான 8-ம் வகுப்பு மாணவன் பிணமாக கரை ஒதுங்கினான்: கடலில் குளித்தபோது இறந்தானா? போலீசார் விசாரணை


குலசேகரன்பட்டினத்தில்: மாயமான 8-ம் வகுப்பு மாணவன் பிணமாக கரை ஒதுங்கினான்: கடலில் குளித்தபோது இறந்தானா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Oct 2018 3:15 AM IST (Updated: 20 Oct 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் மாயமான மாணவன், பிணமாக கரை ஒதுங்கினான். அவன் கடலில் குளித்தபோது இறந்தானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம், 

நாகர்கோவில் இருவப்பபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 13). இவன், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 17-ந்தேதி முருகன் தன்னுடைய குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்தார். அப்போது ராஜேஷ், கடையில் சென்று பொருட்கள் வாங்கி வருவதாக கூறிச் சென்றான்.

பின்னர் நீண்ட நேரமாகியும் ராஜேஷ் திரும்பி வரவில்லை.

அவனை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பக்கத்து ஊரான மணப்பாடு கடற்கரையில் ராஜேஷ் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தான். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கரை ஒதுங்கி கிடந்த ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே ராஜேஷ் கடலில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story