கோவையில் உள்ள மில்களில் 25–ந் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்


கோவையில் உள்ள மில்களில் 25–ந் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2018 4:15 AM IST (Updated: 20 Oct 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

‘கோவை மாவட்டத்தில் உள்ள மில்களில் வருகிற 25–ந் தேதிக்குள் போனஸ் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் எச்சரிக்கை விடுத்தார்.

கோவை,

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் கோவையில் உள்ள மில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோவை நகருக்குள் செயல்பட்டு வந்த ஏராளமான மில்கள் புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டன. ஆனால் அந்த மில்களில் தொழிற்சங்கங்கள் இல்லை. இதனால் அந்தந்த மில்களின் நிர்வாகங்கள் முடிவு செய்யும் போனஸ் சதவீதமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வரும் மில்களில் இதுவரை போனஸ் பேச்சுவார்த்தை தொடங்கப்படாதது குறித்து வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தொழிற்சங்க துணை தலைவருமான ஆறுமுகம் கூறியதாவது:–

கோவையில் தற்போது தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வரும் மில்களில் இன்னும் போனஸ் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. இதில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதங்கள் அளிக்கப்பட்டு விட்டன. ஆனால் இதுவரை தொடங்கப்படவில்லை. கடந்த ஆண்டை போல 15 முதல் 35 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தனியார் மில்கள் மட்டுமல்லாமல் அரசு மில்களான என்.டி.சி. மில்களில் கூட போனஸ் பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. எனவே அரசு மற்றும் தனியார் மில்களில் வருகிற 25–ந் தேதிக்குள் போனஸ் பேச்சுவார்த்தை தொடங்கி எத்தனை சதவீதம் என்பதை முடிவு செய்து பணம் பட்டுவாடா செய்து விட வேண்டும். இல்லையென்றால் அந்த மில்களின் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story