ரெயில்வே கேட் திறக்கப்படாததை கண்டித்து டிராக்டர்களை தண்டவாளத்தில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம்


ரெயில்வே கேட் திறக்கப்படாததை கண்டித்து டிராக்டர்களை தண்டவாளத்தில் நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2018 3:00 AM IST (Updated: 20 Oct 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே கேட் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., அய்யாகண்ணு உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் முள்ளால் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்வதால் ரெயில்வே கேட் அமைத்துள்ளனர். இந்த சாலை வழியாக புள்ளம்பாடியில் இருந்து செம்பரை, ஆனந்தபுரம், செங்கரையூர், பூண்டி மாதாகோவில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் செல்லும் பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் பயணத்தையும், செலவையும் மிச்சப்படுத்தினர். மேலும் புள்ளம்பாடி பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்.

தற்போது நெல்நாற்று விடும் பணி நடைபெறுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இடுபொருள், விதைநெல் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு இந்த ரெயில்வே கேட்டில் செபாஸ்டின்மேரிஸ் டெல்லா (வயது52) என்பவர் பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவருடன் சண்டையிட்டு தாக்கினர். இதுதொடர்பாக கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து தென்னக ரெயில்வே, புள்ளம்பாடி- முள்ளால் ரெயில்வேகேட்டை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்து மூடியது. இதனால் பல கிராம மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டனர். மேலும் விவசாயிகள் விவசாய பணி பாதிக்கப்படுவதாக கூறி ரெயில்ரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றனர். ஆனால் 5 நாட்கள் ஆகியும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

இதனையடுத்து நேற்று, மூடிய ரெயில்வேகேட்டை திறக்க வலியுறுத்தி புள்ளம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும்மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் புள்ளம்பாடி காமராஜர் சிலை அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் முன்னாள் மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் பாண்டியன் தலைமையில், சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டு புள்ளம்பாடி -திருமழபாடி சாலையில் அமைந்துள்ள ரெயில்வேகேட்டுக்கு வந்தனர்.

பின்னர் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை ரெயில்வே தண்டவாளத்தில் நிறுத்தினர். அதைத்தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., அய்யாகண்ணு உள்பட 120 பேரை கைது செய்து புள்ளம்பாடியில் கருப்பண்ணசாமி திருமணமண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த போராட்டம் காரணமாக கடலூர் - திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் புள்ளம்பாடி ரெயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு 1 மணிநேரம் தாமதமாக திருச்சி சென்றது. மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் லால்குடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பிறகு 1 மணி நேரம் தாமதமாக சென்றது.

இதற்கிடையில் திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், துணை சூப்பிரண்டுகள் சீனிவாசன், ராஜசேகர், தாசில்தார் ராகவன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு உரிய ரெயில்வே கேட்டை திறக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து கேட் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story