சேற்றில் சிக்கி உயிரிழந்த வாலிபர்: சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் - 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கடலூர் அருகே சேற்றில் சிக்கி பலியான தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து வாலிபரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்,
கடலூர் முதுநகர் பனங்காட்டுகாலனியை சேர்ந்த தக்காளி என்கிற மணிமாறன்(வயது 26). இவர் கடந்த 15-ந் தேதி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கமல், பாண்டியன், கஜேந்திரன், அலெக்ஸ், நெல்சன் ஆகியோருடன் புதுச்சேரி மாநிலம் கும்தாமேடு சாராயக்கடைக்கு சென்றார். அங்கு சாராயம் குடித்துவிட்டு நண்பர்களுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது வழியில் தென்பெண்ணையாற்றில் மணிமாறன் உள்பட 6 பேரும் குளித்தனர். இதில் மணிமாறன் திடீரென மாயமானார். பின்னர் அவரது நண்பர்கள் அனைவரும் குளித்துவிட்டு அங்கிருந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் வெளியே சென்ற மணிமாறன் நீண்டநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சுபாஷினி தனது கணவர் குறித்து அவரது நண்பர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் தாங்கள் சாராயம் குடிக்க சென்று விட்டு திரும்பி வரும் வழியில் ஆற்றில் இறங்கி குளித்தபோது மணிமாறன் திடீரென மாயமாகிவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் தென்பெண்ணையாற்றில் மாயமான மணிமாறனை தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மணிமாறன் பிணமாக மீட்கப்பட்டார். ஆற்றில் குளித்தபோது அவர் சேற்றில் சிக்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மணிமாறனின் மனைவி சுபாஷினி தனது மகன், மகள், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், கணேசன் மற்றும் உறவினர்களுடன் நேற்று கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கிடம் புகார் மனு கொடுத்தனர்.
இது குறித்து சுபாஷினி கூறும்போது, எனது கணவர் உள்பட 6 பேரும் ஆற்றில் இறங்கி குளித்தபோது எனது கணவர் மட்டும் திடீரென மாயமாகி இருக்கிறார். அப்படி சம்பவம் நடந்து இருந்தாலும் அவரை காப்பாற்றுவதற்காக உடனடியாக போலீசுக்கோ அல்லது தீயணைப்பு நிலைத்துக்கோ தகவல் தெரிவித்து இருக்க வேண் டும். ஆனால் எனது கணவரின் நண்பர்கள் அனைவரும் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டனர். பின்னர் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதனால் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து மணிமாறனின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story