பரங்கிப்பேட்டை அருகே: மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறிப்பு - மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பரங்கிப்பேட்டை அருகே மூதாட்டியை கத்தியால் வெட்டி நகையை பறித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் யசோதா(வயது 70). இவர் அதேபகுதியில் கடலூர்-சிதம்பரம் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், காய்கறி வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கடைக்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதாவின் கழுத்தில் வைத்தனர்.
மேலும், அவர் அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறு கேட்டனர். இதற்கு யசோதா மறுப்பு தெரிவித்தார். இதனால ஆத்திரமடைந்த மர்ம மனிதர்கள், கத்தியால் யசோதாவின் கழுத்து மற்றும் கை பகுதியில் வெட்டினர்.
பின்னர் அவர் அணிந்திருந்த 4½ பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யசோதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story