புதுவை கடற்கரையில் தூய்மைப்பணி; கவர்னர் கிரண்பெடி பங்கேற்பு
புதுவை கடற்கரையில் கவர்னர் கிரண்பெடி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி தூய்மைப்பணிகளிலும், நீர் நிலைகளை தூர்வாருவதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். அந்த வரிசையில் அவர் புதுவை கடற்கரை செயற்கை மணல் பரப்பில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
அவருடன் நகராட்சி பணியாளர்கள், போலீசார் மற்றும் தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர். செயற்கை மணல்பரப்பு, பாறை இடுக்குகளில் கிடந்த கழிவு பொருட்களை அவர்கள் சுத்தம் செய்தனர். சுமார் 3 மணிநேரம் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதனால் செயற்கை மணல் பரப்பில் தேங்கிக்கிடந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டன. தற்போது அந்த இடம் சுத்தமாக காணப்படுகிறது.
தூய்மை பணிகளை மேற்கொண்ட கவர்னர் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் கடற்கரையில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அத்தகையவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கவர்னர் கிரண்பெடி கடலில் ஆனந்தமாக குளிப்பவர்களை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். அப்போது டிப்டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் கடற்கரையில் சிறுநீர் கழித்தார்.
அதையும் வீடியோ எடுத்த கவர்னர் கிரண்பெடி அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.