அரசின் திட்டங்களை கடன் பெற்றுத்தான் செயல்படுத்துகிறோம் - அமைச்சர் கந்தசாமி வேதனை
அரசின் திட்டங்களை கடன் பெற்றுத்தான் செயல்படுத்துகிறோம் என்று அமைச்சர் கந்தசாமி பொதுமக்களிடம் வேதனையுடன் கூறினார்.
பாகூர்,
புதுவை மாநில பொதுப்பணித்துறை சார்பில் ஏம்பலம் தொகுதி சேலியமேடு கிராமத்தில் ரூ.12.5 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் அமைச்சர் கந்தசாமி குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்துவைத்தார்.
இந்த மையத்தின் மூலம் சேலியமேடு, ஆதிங்கப்பட்டு, சார்காசிமேடு, பின்னாச்சிக்குப்பம், குடியிருப்பு பாளையம், அரங்கனு£ர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்பெறுவார்கள். இங்கு 20 லிட்டர் குடிநீர் ரூ.7–க்கு வினியோகம் செய்யப்படுகிறது.
விழாவில் கலந்துகொண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் கந்தசாமியிடம் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், கடந்த ஆண்டு தூர்வாரப்பட்ட வேலைக்கு பணம் வழங்கவேண்டும், இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு அமைச்சர் கந்தசாமி, ‘தற்போது தொடங்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் தனியார் பங்களிப்பில் கடன் பெற்று அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோல பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்காததால் கடன் பெற்றே அந்த திட்டங்களை செயல்படுத்துகிறோம். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 20 மாத சம்பளம் வழங்க முடியாமல் உள்ளது. இதனால் சார்பு நிறுவனங்கள் ஸ்தம்பித்து உள்ளது. இதற்குமேலும் வேலைக்கு ஆட்களை நியமித்தால் சம்பளம் எப்படி வழங்குவது? பொருத்துதான் இருக்க வேண்டும்’ என வேதனையுடன் கூறினார்.
விழாவில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் கன்னியப்பன், கனிக்கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.