அதிக உப்பு... எச்சரிக்கும் ஆய்வு


அதிக உப்பு... எச்சரிக்கும் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2018 12:28 PM IST (Updated: 20 Oct 2018 12:28 PM IST)
t-max-icont-min-icon

துரித உணவுகளில், குறிப்பாக சீன வகை உணவுகளில் அளவுக்கு அதிகமான உப்பு இருப்பதாக ஓர் ஆய்வு எச்சரிக்கிறது.

உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இருந்து பார்சல் மூலம் பெறப்படும் சீன உணவுகளில் உப்பு அதிகளவில் இருப்பதால், அவற்றில் சுகாதார எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என ஒரு பிரசாரக் குழு கூறுகிறது.

‘ஆக்‌ஷன் ஆன் சால்ட்’ என்ற அந்த அமைப்பு, 150-க்கும் மேற்பட்ட உணவுகள் பகுப்பாய்வு செய்தது. அந்த உணவுகளில் டீனேஜ் வயதினருக்குத் தினசரி அனுமதித்த 6 கிராம் அளவில், பாதி அளவு உப்பு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக, முட்டை பிரைடு ரைசில் கூடுதலாக 5.3 கிராம் உப்பு இருக்கிறது.

சைடு டிஷ் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்துச் சாப்பிட்டால், கூடுதலாக 4 கிராம் உப்பை ஒருவர் சேர்த்துக்கொள்ள நேரிடும் என அந்த ஆய்வு கூறுகிறது.

சில உணவுகள் 2 கிராமை விட குறைவான உப்பை கொண்டுள்ளன. உதாரணமாக, காய்கறி ஸ்பிரிங் ரோலில் 0.8 கிராம் முதல் 1.4 கிராம் வரை அளவிலான உப்பு உள்ளது.

சாஸ், அரிசி மற்றும் நூடுல்ஸ் வகை உணவுகளில், உப்பின் அளவு சிறிதளவு அதிகமாக உள்ளது.

சோயா சாஸ், சில்லி சாஸ் போன்ற சாஸ் வகைகளிலும் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது.

மொத்தம் 141 உணவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், 43 சதவீத உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தது. அப்படி என்றால் அதன் பேக்கின் மேலே சிவப்பு அறிவிப்பு முத்திரை இடம்பெற வேண்டும்.

அதிக உப்பு, ரத்த அழுத்தத்தைக் கூட்டலாம், அது இதயநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் ஏற்கனவே உப்பு உள்ளது. அத்துடன் நாம் வேறு தனியாக உப்பு சேர்த்துக்கொள்கிறோம்.

உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும் என்று இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

சீன உணவுகளை இந்தியர்களாகிய நாம் விரும்பிச் சாப்பிட்டு வருகிறோம். எனவே நாமும் கவனமாக இருக்க வேண்டும்.

உணவில் உப்பின் அளவைக் கூட்டுவது ரொம்பத் தப்பு!

Next Story