உலக மொழிகளில் பாடும் இளம் இசை மேதை!
மும்பையைச் சேர்ந்த 19 வயது ஷியாமோலி சங்கியை, இளம் இசை மேதை என்று சொல்வதில் தவறில்லை.
ஷியாமோலி சங்கி ஜுலு, ஜோஸா, ஸ்பானிஷ், சீனம், ஷோனா போன்ற உலக மொழிகளில் எல்லாம் பாடுகிறார், தபேலா, ஹார்மோனியம், பியானோ போன்ற இசைக்கருவிகளை மிகச் சிறப்பாக இசைக்கிறார், பாடிய இரு பாடல்களுக்காக இணையத்தில் பரபரப்பாகப் பெயர் பெற்றிருக்கிறார், இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் பாடியிருக்கிறார்.
தனது ஆறு வயது முதலே இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றவர் ஷியாமோலி. அதேநேரம், தான் படிப்புக்கும் முக்கியத்துவம் அளித்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.
உண்மையில், இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயில்வது, கணிதமும், தத்துவமும்.
‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோருமே நன்கு படித்தவர்கள். ஆனால் எனது பெற்றோர் இசையிலும் நாட்டம் உள்ளவர்கள். அதனால்தான் அவர்கள் எனது இசைப் பயணத்துக்கு அனுமதித்தார்கள். அதேநேரம், நான் இசையுடன் படிப்புக்கும் சரிசமமான முக்கியத்துவம் அளிப்பதில் எப்போதும் கவனமாக இருக்கிறேன்’’ என்றார்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல் பருவத் தேர்வுக்குப் பின் ஷியாமோலிக்கு ஆறு மாத கால விடுப்புக் கிடைக்க, அதைத் தனது இசை ஆர்வத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ரவி சிங்காலை ஷியாமோலி சந்திக்க, இவர்களது கூட்டணியில் புதிய பாடல் பிறந்தது.
பிரபல ஜீ மியூசிக் நிறுவனம் வெளியிட்ட அப்பாடலை, சமூக வலைத்தளத்தில் முதல் மாதத்திலேயே ஒரு கோடிப் பேருக்கு மேல் பார்த்து, கேட்டு ரசித்தார்கள். இவரது இரண்டாவது பாடலையும் வெளியிட்ட ஒரு வாரத்துக்குள்ளாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இப்படி இசையுலகில் பரபரப்பாக கவனிக்கப்பட்டாலும், மீண்டும் படிப்புக்குத் திரும்பியிருக்கிறார் ஷியாமோலி.
இசை, படிப்பு இரண்டையும் சரிசமமாகக் கையாளுவது தனக்கு பழகிப் போய்விட்டது என்கிறார் இவர்.
‘‘நேரத்தைப் பகிர்ந்துகொள்ளும் கலை எனக்கு கைவந்துவிட்டது’’ என்று ஷியாமோலி சொல்கிறார்.
டீனேஜ் வயதிலேயே ஏராளமான ரசிகர்களைப் பெற்றுவிட்டாலும், ஷியாமோலி அதில் மயங்கிவிடவில்லை என்பது அவரது பேச்சில் தெரிகிறது.
‘‘என்னுடைய முகம் தெரியாதவர் கூட எனது பாடலைப் பாராட்டிக் கூறினால் போதும். மற்றபடி, வெற்றியை நான் தலைக்கு ஏற்றிக்கொள்ளவில்லை. அது நாம் நம் எதிர்கால இலக்குகளில் கவனம் செலுத்தவிடாது’’ என்று எளிமையாகச் சொல்கிறார்.
இந்த நிதானம், ஷியாமோலியை சிகரம் சேர்க்கும்!
Related Tags :
Next Story