கடமலைக்குண்டு அருகே பரிதாபம்: நோய் கொடுமையால் தம்பதி தற்கொலை


கடமலைக்குண்டு அருகே பரிதாபம்: நோய் கொடுமையால் தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM IST (Updated: 20 Oct 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே நோய் கொடுமையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் கடமலைக் குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம் (வயது 58). விவசாயி. இவருடைய மனைவி சரஸ்வதி (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஜெயம் மற்றும் சரஸ்வதி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவருடைய கை, கால் செயலிழந்து நடக்க முடியாமல் வீட்டுக்குள் முடங்கினார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அவரை சரஸ்வதி வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் கணவரை சரிவர பராமரிக்க முடியவில்லை. மேலும் யாரும் உதவிக்கு முன் வராததால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். நோய் கொடுமையில் இருந்து மீள முடியாத அவர்கள், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று அதிகாலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்தனர். இருப்பினும் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன், மனைவி இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதையடுத்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோய் கொடுமையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story