விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கவிழ்ந்த லாரி 8 ரெயில்கள் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதி
விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணிக்காக மண் எடுத்து வந்த லாரி பிளாட்பாரத்திலேயே கவிழ்ந்ததால் அந்த வழியாக சென்ற 8 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
வேலூர் காட்பாடிக்கும், குடியாத்தத்துக்கும் இடையே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பார சீரமைப்பு பணி மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிகளுக்காக ஜல்லி, மண் எடுத்து வரும் லாரிகள் பிளாட்பாரத்திற்கே வந்து அவற்றை கொட்டிவிட்டுச்செல்கின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை மண் எடுத்து வந்த லாரி முதலாவது பிளாட்பாரத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகத்தில் செல்லும். நல்ல வேளையாக ரெயில் ஏதும் அந்த நேரத்தில் வராததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. எனினும் லாரி பிளாட்பாரத்தில் கவிழ்ந்தது குறித்து காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு விரிஞ்சிபுரம் ரெயில் நிலைய அலுவலர்கள் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து உடனே ரெயில்வே உயர் அதிகாரிகள் சென்னை - ஜோலார்பேட்டை நோக்கி வரும் ரெயில்களை ஆங்காங்கே நிறுத்த உத்தரவிட்டனர். அதன்படி கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவை, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு அடுத்தடுத்து சென்ற 8 ரெயில்கள் விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்துக்கு முன்னதாகவே மற்ற ரெயில் நிலையங்களில் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட நேர்ந்தது.
இதனிடையே கவிழ்ந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணி நடந்தது. அந்த பணிகள் முடிந்ததும் 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
Related Tags :
Next Story