ஒரே நாளில் அடுத்தடுத்து சம்பவம்: நகை பறித்த 3 பேர் கைது : 14 பவுன் பறிமுதல்


ஒரே நாளில் அடுத்தடுத்து சம்பவம்: நகை பறித்த 3 பேர் கைது : 14 பவுன் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2018 9:30 PM GMT (Updated: 20 Oct 2018 5:35 PM GMT)

திண்டுக்கல்லில், ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவத்தில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கிழக்குரத வீதியில் உள்ள பாதாள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 65). இவர் கடந்த மாதம் 18-ந்தேதி திண்டுக்கல் மெயின்ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.

ஆனால் அவர்களிடம் பேசாமல், ஆனந்தகுமார் அங்கிருந்து சென்றார். இதையடுத்து அந்த நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை முதியவரின் முன்னால் மறித்து நிறுத்தினர். பின்னர் அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

திண்டுக்கல் காந்திஜி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் காட்டாஸ்பத்திரி பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். இவருடைய மனைவி சித்ரா (40). இவரும் கணவருடன் சேர்ந்து பேக்கரியில் வியாபாரத்தை கவனிப்பது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 18-ந்தேதி இருவரும் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

முதலில் சித்ரா தன்னுடைய ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் திண்டுக்கல்-திருச்சி சாலையில் மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள், சித்ரா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 சம்பவங்களிலும் 3 பேர் ஈடுபட்டதால், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் இவற்றை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து 2 சம்பவங்களும் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முதியவரிடமும், சித்ராவிடமும் 3 பேர் நகை பறித்த காட்சி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, நல்லதம்பி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது மருதாணிக்குளத்தை சேர்ந்த விஜயஜெயசீலன் (20), ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த மதிவாணன் (21), கோவிந்தாபுரத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (24) ஆகியோர்என்பது தெரியவந்தது.

பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 14 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். நகைபறிப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 

Next Story