டெங்கு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் தலைமைஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுவதை தடுக்க அது குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளது. இந்த காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திருவண்ணாமலையில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, பேசியதாவது:-
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவ நமது சுற்றுப்புறம் காரணமாக அமைகிறது. பகல் நேரத்தில் கடிக்கும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. எனவே பள்ளி வளாகத்தை தூய்மையாக வைப்பதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி அருகே தென்னை ஓலைகள், தேங்காய் ஓடுகள், உரல், பழைய டயர், பழைய பாட்டில்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி அவற்றில் ‘ஏடிஸ்’ கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் வரக்காரணமாக அமைகிறது. எனவே அதுபோன்ற பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசு ஒழிப்பு, ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அப்போது தான் நாம் சுகாதாரமாக வாழ இயலும். இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தை டெங்கு, சிக்கன்குனியா இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை, மற்றும் பசுமைப் படை மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கம் மூலமாக பெற்றோர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி மற்றும் வீடுகளில் வீணாக தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்று அதன்படி செயல்பட வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டாலோ, பள்ளி மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ, பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டாலோ அதனை ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் மாணவர்களின் பெற்றோருக்கு அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை வாங்கி உண்ண வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story