சபரிமலை அய்யப்பன் கோவிலை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி


சபரிமலை அய்யப்பன் கோவிலை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 20 Oct 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

நாகர்கோவில்,

சபரிமலைக்கு பெண்களை அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு விதித்த தீர்ப்பு அய்யப்ப பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இதுபோல பல தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. ஆனால் அதை கேரள அரசு உதாசீனப்படுத்தியுள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு பிரச்சினை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி போன்றவற்றில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை கேரள அரசு உதாசீனம் செய்துள்ளது. ஆனால் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் மட்டும் அதிக முனைப்பு காட்டியுள்ளது.

இந்த நிலையில் கேரள முதல்–அமைச்சர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் சபரிமலைக்கு 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் மறு சீராய்வு மனு போடுவது தீர்வு ஆகாது. எனவே கேரள அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு தாமதிக்காமல் நாடாளுமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் கொண்டு வந்து சபரிமலை அய்யப்பன் கோவிலை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் 21–ந் தேதி (அதாவது இன்று) தமிழகம் முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாகர்கோவிலில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்து வரும் மக்கள் தாமிரபரணியில் புனித நீராடுகிறார்கள். எனவே தமிழ்நாட்டில் உள்ள நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் சுபா.முத்து, பொதுச்செயலாளர் சரத் சுந்தர், மாநில செயலாளர் வசந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story