ஆறுமுகநேரியில் ஒரே நாளில் 3 வீடுகளில் 13 பவுன் நகை திருட்டு குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்ற போது மர்மநபர்கள் கைவரிசை
ஆறுமுகநேரியில் ஒரே நாளில் 3 வீடுகளில் 13½ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் காளி. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 50). இவர் தனியார் திருமண மண்டபத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். காளி நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று மதியம் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது அவர்களது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 8¼ பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. காளியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து திறந்து, நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதேபோன்று பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்லத்துரை. கட்டிட தொழிலாளி. இவர் தன்னுடைய மனைவி முத்துகனி மற்றும் 2 குழந்தைகளுடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று மதியம் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களின் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 2¼ பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.
செல்லத்துரையின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டில் புகுந்து நகைகள், பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
ஆறுமுகநேரி பாரதிநகரில் வசிப்பவர் செந்தில்குமார் (60). உப்பள தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று மதியம் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. வீட்டில் உள்ள பீரோவும் திறந்து கிடந்தது.
அதில் இருந்த 3 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
செந்தில்குமாரின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க ஜன்னலை கடப்பாரை கம்பியால் உடைத்து பெயர்த்து எடுத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகார்களின்பேரில், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். ஆறுமுகநேரியில் ஒரே நாளில் 3 வீடுகளில் நடந்த துணிகர திருட்டு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story