மாற்றுத்திறனாளி பெண்கள் 3 சக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளி பெண்கள் உயர்த்தப்பட்ட மானியத்துடன் 3 சக்கர வாகனம் பெற 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக அரசு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 3 சக்கரவாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கி வந்தது. தற்போது இந்த தொகையை உயர்த்தி ரூ.31 ஆயிரத்து 250 வழங்க உத்திரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பயன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளி பெண்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். மேலும் வருடாந்திர வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு மட்டும் இருசக்கர வாகனம் மானியமாக வழங்கப்படும். வாகனத்திற்காக வழங்கப்படும் மானியத் தொகை ரூ.31 ஆயிரத்து 250 போக, மீதத் தொகையை மாற்றுத்திறனாளி பெண்கள் செலுத்திட சம்மதம் தெரிவித்தல் வேண்டும்.
எனவே, மேற்காணும் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மாற்றுத்திறனாளி பெண்கள் விண்ணப்பப் படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கிராம பகுதியில் உள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், நகர் பகுதியை சேர்ந்தவர்கள் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் நேரடியாகவோ அல்லது விரைவு பதிவு தபால் மூலமாகவும், அனைத்து வேலை நாட்களிலும் வருகிற 24-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story