சிவகிரி அருகே பொதுமக்கள் திடீர் சாலைமறியல் மதுக்கடையை அகற்றக்கோரிக்கை
சிவகிரி அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி நகரப்பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு சத்திரத்தில் இருந்து வடுகப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கடை அமைந்த பகுதியானது வடுகப்பட்டி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
மேலும் இப்பகுதியில் மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும் பிரதான வழியாகும். புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையானது, பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கூறியும், அந்த மதுக்கடையை உடனடியாக அகற்றக்கோரி நேற்று 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள வடுகபட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சிவகிரி மண்டல துணை தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கங்கா, கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உங்களுடைய கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அதன் பின்னர் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story