கோவில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்


கோவில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 21 Oct 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் வலியுறுத்தி உள்ளனர்.

பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் தாமிரபரணி புஷ்கர விழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று கோவில் பூசாரிகளுக்கான மாநில மாநாடு நடந்தது. இந்தோ கலாசார சமிதி மாநில பொதுச்செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எத்திராஜ் வரவேற்றார். முன்னதாக, மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் குத்துவிளக்கேற்றினார். மாநில இணை செயலாளர் வெள்ளியங்கிரி இறைவணக்கம் பாடினார். சிறப்பு பேச்சாளராக பூசாரிகள் பேரமைப்பு தலைவர் ராஜா பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நதி நீர்நிலைகளை பாதுகாத்து, வளரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொடக்க கல்வி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை நதிகள் குறித்த பாடத்திட்டத்தை தமிழக கல்வித்துறை தயார் செய்ய வேண்டும். நீர் பாதை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அவற்றை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளில் மாமிச கழிவு, சாயப்பட்டறை கழிவு, தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசு நியமிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் படித்துறைகளை செப்பனிட்டு பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சிதிலமடைந்த கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் செய்து, தினமும் பூஜை நடத்த வேண்டும். கோவில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டி தலைவர் ராமானந்தா சுவாமி, விசுவ இந்து பரிஷத் அகில பாரத இணைச் செயலாளர் ஆடிட்டர் மூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் நாகராஜன் உள்பட பூசாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story