தர்மபுரி மாவட்டத்தில் 23 தார்சாலை பணிகளுக்கு ரூ.4.95 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் 23 தார்சாலை பணிகளுக்கு ரூ.4.95 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 23 தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.4.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.61.78 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை மற்றும் தார்சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தாய் திட்டத்தின் கீழ் 14.74 கி.மீ தொலைவிற்கு 23 புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்காக ரூ.4.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில் மாட்லாம்பட்டி-முருக்கம்பட்டி சாலை முதல் குண்டலஅள்ளி வரை ரூ.14.05 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலையும், புலிக்கரை-முக்குளம் சாலை முதல் கெண்டிகானஅள்ளி வரை ரூ.20.02 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த வருவாய் நிதியிலிருந்து பூமாண்டஅள்ளி ஊராட்சியில், கோடியூர்-சென்றாயம்பட்டி முதல் மோதூர் வரை 1.400 கி.மீ தொலைவிற்கு ரூ. 27.71 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. காரிமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் ரூ.61.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் தர்மபுரி நகர வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் நாகராசன், முன்னாள் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் கோவிந்தசாமி, வீரமணி, தாசில்தார் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், வெங்கடரமணன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story