கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் போடப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தகவல்


கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் போடப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் போடப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 379 தாய் கிராமங்களில், 250 கிராமங்களில் போலீசார், பொதுமக்கள் நல்லுறவை வளர்க்கும் வகையில் அவுட் ரீச் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியில் கிராமங்களில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்தும், அடிப்படை வசதிகள் உள்பட எந்த துறை தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் எழுதி போடலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறைகள் தொடர்பாக தகவல் அளிக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைமை காவலர் பொறுப்பாளர்களாக இருப்பதோடு, நாள்தோறும் கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளை தகவல்களாக அவர்கள் பெறுவார்கள். இதே போல் புகார் பெட்டியில் போடப்படும் மனுக்களையும் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் போட்டவர்கள் தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது.

அத்துடன் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களின் செல்போன் எண்கள் பொதுமக்களிடம் அளிக்கப்படும். பிரச்சினைகள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை, தங்களது கிராமத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள தலைமை காவலரிடமோ அல்லது புகார் பெட்டியில் மனுவாக எழுதி போட்டால் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதோடு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் புகார்களை எந்த தயக்கமுமின்றி தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் சோக்காடி உள்பட பல்வேறு கிராமங்களில் போலீசார் காவல் துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி, ‘அவுட்ரீச்’ திட்டம் தொடர்பாக விளக்கி கூறினார்கள்.

Next Story