பரமத்திவேலூர், எருமப்பட்டியில் உள்ள விதை பண்ணைகளில் அதிகாரி ஆய்வு
பரமத்திவேலூர் மற்றும் எருமப்பட்டி பகுதியில் உள்ள விதை பண்ணைகளில் கோவை விதைச்சான்று இணை இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
கோவை விதைச்சான்று இணை இயக்குனர் செல்வராஜ், நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று துறையின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக பரமத்திவேலூர் அருகே உள்ள நடந்தை மற்றும் ராமதேவம் கிராமங்களில் அமைக்கப்பட்டு உள்ள நிலக்கடலை விதைப்பண்ணை மற்றும் எருமப்பட்டி வட்டாரம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட உள்ள வீரிய ஒட்டு ஆமணக்கு விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் விதை பரிசோதனை ஆய்வகத்தின் விதை முளைப்புத்திறன் பரிசோதனைகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் நாமக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், விதைச்சான்று பணிகளான விதைப்பண்ணை பரப்பு பதிவு செய்தல், சான்றளிப்பு செய்யப்பட வேண்டிய விதை அளவுகள், விதைப்பண்ணை பதிவேடு, சான்றட்டை இருப்பு பதிவேடு, விதை மாதிரிகள் அனுப்பும் பதிவேடு மற்றும் பணப்பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
மேலும் விதைப்பண்ணைகள் வயலாய்வு மேற்கொள்ளும் போது கவனிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் அத்தனூர் பகுதியில் செயல்படும் தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை ஆய்வு செய்து விதை சுத்திகரிப்பு பணிகள், வயல்மட்ட விதைகள் இருப்பு, விதை மாதிரிகள் எடுக்கும் பணிகள் மற்றும் பராமரிக்கும் பதிவேடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் ஜெகதீசன், விதைச்சான்று அலுவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார், பிரேமா மற்றும் உதவி விதை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story