நூற்பாலையில் வேலை செய்த இளம்பெண் திடீர் சாவு; உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு


நூற்பாலையில் வேலை செய்த இளம்பெண் திடீர் சாவு; உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 21 Oct 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

நூற்பாலையில் வேலை செய்த இளம் பெண் திடீரென இறந்தார். அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் ஊசி மலைப்பகுதியை சேர்ந்தவர் ரங்கன். இவருடைய மகள் ராஜி (வயது 18). இவர் கோபி அருகே உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆலை நிர்வாகத்தினர் ராஜியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜியின் உறவினர் ஒருவர் கோபி சென்று ராஜியை ஊசிமலைக்கு ஆலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் அழைத்து வந்தார். ஆனால் வரும் வழியிலேயே ராஜி திடீரென இறந்தார்.

அந்த வாகனம் ஊசிமலையை சென்றடைந்ததும், ராஜியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் அவர்கள் தங்களுடைய மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறியதுடன், உடலை வாங்க மறுத்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story